×

குருசுமலை மாதா ஆலயத்திற்கு குவாதலூப்பே அன்னை மேலங்கி நாளை வருகை

சிவகிரி : குருசுமலை மாதா ஆலயத்திற்கு மெக்சிகோவில் உள்ள குவாதலூப்பே அன்னை மேலங்கி நாளை வருகிறது. இதையொட்டி தரிசனத்திற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பாளை. மறைமாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள வேலாயுதபுரம் பங்கிற்குட்பட்டது புனித குருசுமலை மாதா திருத்தலம். இந்த ஆலயத்திற்கு நாளை (29ம் தேதி) மெக்சிகோ நகரின் தேபியாக்குன்றிலிருக்கும் குவாதலூப்பே மரியன்னையின் மேலங்கி, புனித பயணமாக வர உள்ளது.

இதையொட்டி புனித அங்கியை தரிசிக்க தென்தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குருசுமலையில் திரளுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. 1943ம் ஆண்டு குருசுமலையில் மாதா காட்சியளித்ததாகவும், அதைத் தொடர்ந்து 1945ம் ஆண்டு முதல் மலைக்குன்றில் ஆண்டுதோறும் மே மாத கடைசி வாரத்தில் திருவிழா கொண்டாடப்பட்டும் வருகிறது. 1989ல் மலையில் தகரக்கூரையுடன் மாதா கோயில் அமைக்கப்பட்டது.

 2012ல் புதிய கோயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டு குருசுமலை முகட்டில் 12 அடி உயர சிலுவை, 14 சிலுவை பாதை நிலைகள், புனித அந்தோணியார் புதுமைத் தோட்டம் மற்றும் மாதா பாதத்தில் இருந்து வரும் புனித நீரூற்று ஆகியவை மக்களின் வழிபாட்டிற்காக அர்ச்சிக்கப்பட்டன.இந்நிலையில் குருசுமலையில் மாதா காட்சிக் கொடுத்த 75வது ஆண்டு பவள விழாவை கொண்டாடும் வகையில், மெக்சிகோ நாட்டின் தலைநகரான மெக்சிகோ நகரின் தேபியாக்குன்றிலிருக்கும் குவாதலுப்பே அன்னையின் மேலங்கி திருப்பயண தரிசன விழா ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நாளை நடைபெறும் விழாவில் பாளை, திண்டுக்கல், சிவகங்கை, தூத்துக்குடி, கோட்டாறு, குழித்துறை ஆகிய மறை மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

காலை 9 மணிக்கு குவாதலுப்பே அன்னையின் மேலங்கி போர்த்தி ஜெப வழிபாட்டுடன் விழா தொடங்குகிறது. தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி, விவிலியம் தொடர்பான கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன. மாலை 4 மணிக்கு மலையாள திருப்பலியுடன் நிகழ்ச்சி நிறைவடைகிறது. மதியம் அசன விருந்து நடக்கிறது.ஏற்பாடுகளை வேலாயுதபுரம் பங்குத்தந்தை அருள் லூர்து எட்வின், திருச்சிலுவை அருட்சகோதரிகள் மற்றும் பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kurusumalai Mata Temple ,Guadeloupe , Sivagiri ,Annai Melanki,Kurusumalai ,Matha Temple
× RELATED கடல் சீற்றம் காரணமாக தனுஷ்கோடிக்கு...